Followers

ஊட்டியை சேர்ந்த பொம்மன்-பெல்லி போல் பிறந்த 7 நாளில் தாயை பிரிந்த குட்டி யானையை பராமரிக்கும் இளம் தம்பதி


நீலகிரி மாவட்டம் முதுமலை வனச்சரணாலயத்திற்கு உட்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாமில் பணியாற்றி வரும் பெல்லி, பொம்மன் தம்பதியினர் தாயை பிரிந்து தவிக்கும் குட்டி யானைகளை பராமரித்து வருகிறார்கள். இவர்களின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.

இந்த நிலையில் பெல்லி-பொம்மன் தம்பதி போல் கர்நாடகத்திலும் ஒரு தம்பதி தாயை பிரிந்த ஒரு குட்டி யானையை பராமரித்து வருகிறார்கள். அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகாவில் உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்டு ராம்புரா யானைகள் பயிற்சி முகாம் உள்ளது. இங்கு ராஜு (வயது 30) என்பவர் யானை பாகனாக உள்ளார். இவரது மனைவி ரம்யா (26). இந்த இளம் தம்பதியினர், இந்த முகாமில் உள்ள குட்டி யானைகளை பராமரித்து வளர்த்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த முகாமிற்கு, பிறந்த 7 நாளில் தாயை பிரிந்து தவித்த பெண் குட்டி யானை ஒன்றை வனத்துறையினர் மீட்டு அழைத்து வந்தனர். அந்த குட்டி யானையை பராமரிக்கும் பொறுப்பை வனத்துறையினர் ராஜு-ரம்யா தம்பதியிடம் வழங்கினர்.

இதைத்தொடர்ந்து அந்த குட்டி யானைக்கு வேதா என பெயர் சூட்டினர். அந்த இளம் தம்பதி, தங்களது பிள்ளைப்போல் பாவித்து வேதாவை சீராட்டி பாராட்டி வளர்த்து வருகிறார்கள். அதனால் அந்த குட்டி யானையும், அவர்களுடன் நட்பாக பழகி வருகிறது. அவர்கள் எங்கு சென்றாலும் அவர்களுடன் ஓடிச் செல்கிறது. அத்துடன் அவர்கள் சொல்வதை கேட்டு செல்லப்பிள்ளையாக வேதா யானை மாறிவிட்டது.

இதுகுறித்து இளம் தம்பதியான ராஜு-ரம்யா கூறுகையில், வேதா, பிறந்த 7 நாளில் தாயை பிரிந்துவிட்டது. அன்று முதல் இந்த முகாமில் வைத்து நாங்கள் அந்த குட்டி யாைனயை பராமரித்து வருகிறோம். எங்கள் பிள்ளை போல் அதனை வளர்த்து வருகிறோம். நாங்கள் ஒரு நாள் வராவிட்டாலும் எங்களை தேடி அலையும். இதனால் நாங்கள் அதை விட்டு பிரிவதில்லை என்றனர். குட்டி யானை வேதா தினமும் 12 லிட்டர் பால் குடித்து வருகிறது. அதற்கு ராஜு-ரம்யா தம்பதி தான் அந்த யானைக்கு புட்டி மூலம் பால் புகட்டி வருகிறார்கள்.


நமது செய்தியாளர் Nandeesh

 

Post a Comment

Previous Post Next Post