தேனியில் ரூபாய்.2 லட்சம் மதிப்பிலான யானைத் தந்தங்கள் விற்பனை செய்ய முயன்ற 5 பேர் கைது
தேனி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா மேகமலை வனச்சரகத்திறக்கு உட்பட்ட பொம்மராஜபுரம் கிராமத்தை சேர்ந்த பொம்மராஜ், கடமலைக்குண்டு கிராமத்தை சேர்ந்த பாண்டீஸ்வரன், மயிலாடும்பாறை கிராமத்தை சேர்ந்த மகாலிங்கம் ஆகியோர், இரண்டு யானைத் தந்தங்களை விற்பனை செய்ய திட்டமிட்டதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
பின்னர், பெரியகுளம் அருகே பங்களாப்பட்டி பகுதியில், அங்குள்ள பாலாஜி, ஈஸ்வரன் ஆகியோருடன் யானைத் தந்தங்களை விற்பனை செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது, வனத்துறையினர் சுற்றி வளைத்து 5 பேரையும் கைது செய்தனர்.
கைப்பற்றப்பட்ட யானைத் தந்தங்கள் சுமார் 4–5 வயது கொண்ட யானையுடையது என்றும், அதன் மதிப்பு ரூ.2 லட்சம் என்றும் விசாரணையில் தெரியவந்தது.
யானை வனப்பகுதிக்குள் வேட்டையாடப்பட்டதா? என்பது குறித்து வனத்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு வனச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நமது செய்தியாளர் :மூணாறு மணிகண்டன்