திம்பம் மலைப்பாதையில் ஓய்வெடுத்த சிறுத்தை – வீடியோ வைரல்
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை, மைசூரு தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கிய சாலையாகும். இந்த மலைப்பாதை வழியாக தமிழகம் – கர்நாடக மாநிலங்களுக்கு இடையே சரக்கு மற்றும் வாகன போக்குவரத்து நடைபெற்று வந்தது.
ஆனால் வனவிலங்குகளின் பாதுகாப்பு கருதி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து, 2022 பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் இரவு 6 மணி முதல் காலை 6 மணி வரை திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டது. இதனால் வனப்பகுதி இரைச்சல் இன்றி அமைதியாக இருப்பதால், வனவிலங்குகள் சாலையில் சுதந்திரமாக நடமாடும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் திம்பம் மலைப்பாதையில் சென்ற ஒரு வாகன ஓட்டி, சாலையோர தடுப்புச் சுவரில் ஓய்வெடுத்து படுத்திருந்த சிறுத்தையை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வாகனம் அருகில் சென்றதும் சிறுத்தை எழுந்து நின்று, உடலை நெளிந்தவாறு மெதுவாக தடுப்புச் சுவரில் நடந்து சென்று, வனப்பகுதிக்குள் மறைந்தது இந்த காட்சியை அந்த வாகன ஓட்டி தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதுகுறித்து வனத்துறை தெரிவித்ததாவது:
“தாளவாடி மலைப்பகுதியில் சிறுத்தைகள் அடிக்கடி நடமாடி வருகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் சாலையில் சிறுத்தைகள் தோன்றுவது சாதாரணமாகி விட்டது. அந்த நேரத்தில் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தங்களது வாகனங்களை விட்டு இறங்கி செல்போனில் படம் பிடிக்க கூடாது. சில சமயம் அது உயிருக்கு ஆபத்தாக மாறக்கூடும். எனவே அனைவரும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இதை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்தனர்.
நமது செய்தியாளர் :முருகானந்தம்