Followers

கோத்தகிரி அருகே மின்சாரம் தாக்கி கரடி உயிரிழந்தது பொதுமக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

 கோத்தகிரி அருகே மின்சாரம் தாக்கி கரடி உயிரிழந்தது பொதுமக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.



நீலகிரி மாவட்டம்:

இன்று (அக்டோபர் 16) காலை சுமார் 7 மணியளவில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டம், அரவேணு அருகே உள்ள அல்லமனை என்ற இடத்தில், சுமார் 5 வயது மதிக்கத்தக்க ஆண் கரடி ஒன்று மின்சாரம் தாக்கி இறந்தது தெரியவந்தது.



அப்பகுதியில் நேற்று இரவு பெய்த மழையின் போது, ஸ்பெதோடியா மரத்தின் கிளையில் மின்வாரிய கம்பி ஒன்று பட்டு, மழை ஈரத்தால் வெந்து அறுந்து கீழே விழுந்தது. அந்த வழியாகச் சென்ற கரடி, அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.



தகவல் அறிந்தவுடன், கோத்தகிரி வனச்சரக அலுவலர் தலைமையிலான வனத்துறை குழுவினரும், தமிழ்நாடு மின்வாரியத்தின் உதவி செயற் பொறியாளர் தலைமையிலான மின்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்குச் சென்று தணிக்கை மேற்கொண்டனர்.


பின்னர், நீலகிரி மாவட்ட வன அலுவலர் அவர்களின் உத்தரவின்படி, நீலகிரி வனக் கோட்ட உதவி வன பாதுகாவலர் மற்றும் வனப் பாதுகாப்புப் படை உதவி வன பாதுகாவலர் ஆகியோர் சம்பவத்தை ஆய்வு செய்தனர். அதன் பின் கரடியின் பிரேதம் கைப்பற்றி, லாங்க்வுட் காப்புக்காடு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.


அங்கு தன்னார்வ தொண்டு அமைப்பினரும், வனத்துறை அதிகாரிகளும் முன்னிலையில், முதுமலை புலிகள் காப்பகத்தின் வன கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் ராஜேஷ்குமார் அவர்களால் உடற்கூறு ஆய்வு (போஸ்ட் மார்டம்) நடத்தப்பட்டது.



உடற்கூறு ஆய்வு முடிந்த பின், கால்நடை மருத்துவர் ஆலோசனையின் பேரில், விறகுகள் அடுக்கி கரடியின் உடல் மரியாதையுடன் எரியூட்டப்பட்டது.



இந்தச் சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் மின்வாரியம் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நமது செய்தியாளர் :கரன்சி சிவகுமார்

Post a Comment

Previous Post Next Post