கோயம்புத்தூர் மாவட்டம் – போலுவாம்பட்டியில் ஆண் யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது
கோயம்புத்தூர் வனப்பிரிவு, போலுவாம்பட்டி ரேஞ்ச், போலுவாம்பட்டி பிளாக்–2 காப்புக்காட்டின் அருகே ஒரு துயரமான சம்பவம் இன்று அதிகாலை நிகழ்ந்துள்ளது.
காப்புக்காட்டிலிருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில், காட்டுக்கு வெளியே குப்பேபாளையம் கிராமத்தின் அருகே உள்ள பொதுத் தடத்தில் சமீபத்தில் புதிய மின்கம்பம் நிறுவப்பட்டிருந்தது.
இன்று அதிகாலை நேரத்தில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் யானை அந்தப் பகுதியில் உணவு தேடி சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது. அப்போது யானை அந்த புதிய மின்கம்பத்தை தள்ளியபோது, கம்பம் கீழே விழுந்து, அதிலிருந்து மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது.
அந்தப் பகுதியில் உள்ள தோட்ட உரிமையாளர் அதிகாலை 5 மணியளவில் யானை மின்சாரம் தாக்கி கிடப்பதை கண்டு உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தார்.
தகவல் கிடைத்தவுடன், வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். அங்கு மின்கம்பத்தின் நிலைமை, யானையின் தடங்கள், மின்வயர் விழுந்த திசை உள்ளிட்ட விவரங்கள் பரிசோதிக்கப்பட்டன.
யானையின் வயது சுமார் 25 என்றும், அதன் உடல் அருகிலேயே மின் கம்பம் விழுந்துள்ளதையும் வனத்துறை உறுதி செய்துள்ளது. தற்பொழுது, பிரேதப் பரிசோதனைக்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
வனத்துறை அதிகாரிகள், இந்த சம்பவம் எவ்வாறு ஏற்பட்டது என்பதற்கான விசாரணையையும், மின்கம்பம் நிறுவிய மின்வாரிய அதிகாரிகளிடமிருந்து விளக்கம் கோரியுள்ளனர்.
இந்த துயரமான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியும் வருத்தமும் ஏற்படுத்தியுள்ளது. கிராம மக்கள் யானையின் உயிரிழப்பை துயரத்துடன் நினைவு கூறி, எதிர்காலத்தில் இத்தகைய மின்சார அபாயங்கள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
நமது செய்தியாளர் :வடிவேல்


