கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நவமலையில் காட்டு யானையை விரட்டிச் சென்று வீடியோ பதிவு செய்த நபருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வனத்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதி நவமலை. வனவிலங்கு நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில்
மனித விலங்கு மோதல்களை தடுக்கும் விதமாக, வனத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இந்த நிலையில் நவமலை பகுதியில் சென்ற கார் ஒன்று சாலையில் யானையை பார்த்தும் அதைக் கண்டு கொள்ளாமல் அதிக ஒளியுடன் கூடிய வாகனத்தை இயக்கி காட்டு யானையை நவமலை சாலையில் வாகனம் ஓட்டி விரட்டியுள்ளார்.அதை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். மிரண்டு ஓடும் அந்த யானை வனப்பகுதிகளுக்குள் நுழைந்து ஓடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்தக் காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்திய பொள்ளாச்சி வனத்துறையினர், காட்டுயானை வாகனத்தின் மூலம் விரட்டிச் சென்ற வாகன ஓட்டிக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.மேலும் வனப்பகுதியில் அதிக ஒளியுடன் விலங்குகளை விரட்டக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நமது செய்தியாளர் சக்திவேல்