Followers

சத்தியமங்கலம் அருகே மயங்கி கிடந்த பெண் யானை உயிரிழப்பு குட்டி யானையை வேறொரு கூட்டத்தில் சேர்த்த சத்தியமங்கலம் வனத்துறையினர் நெகிழ்ச்சி சம்பவம்

 சத்தியமங்கலம் அருகே மயங்கி கிடந்த பெண் யானை உயிரிழப்பு குட்டி யானையை வேறொரு கூட்டத்தில் சேர்த்த சத்தியமங்கலம் புலிகள் வனத்துறையினர் நெகிழ்ச்சி சம்பவம்







ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பகுதியில் புலி, யானை, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. சத்தியமங்கலம் வனச்சரகம், பண்ணாரி கோயில் அருகே, நேற்று முன் தினம் இரவு குட்டியுடன் தாய் யானை ஒன்று வந்துள்ளது. உடல் நிலை சரியில்லாத தாய் யானை, அப்பகுதியில் உள்ள வனத்தில் மயங்கி விழுந்தது. இதைப்பார்த்த அதன் குட்டி யானை, தாய் யானையைச் சுற்றி வந்து பிளிறியபடி இருந்தது.

இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு வந்தனர். கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான குழுவினர் தாய் யானைக்கு சிகிச்சையளிக்கத் தொடங்கினர். 40 வயதான தாய் யானை, வயது மூப்பு மற்றும் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளது. யானைக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டாலும், அதனால் எழுந்து நிற்க முடியவில்லை. தாய் யானைக்கு சிகிச்சை அளிக்கும் போது, 2 மாதமே ஆன, அதன் குட்டி யானை சுற்றி வந்து பிளிறியபடியே இருந்தது.


பண்ணாரி சாலையின் அருகில், இந்த சம்பவம் நடந்த நிலையில், குட்டி யானை சாலைப் பகுதிக்குச் சென்று, வாகனத்தில் அடிபட்டு விடக் கூடாது என்பதற்காக, வனத் துறையினர் 5 அடி ஆழத்தில் குழி தோண்டி, அதில் குட்டி யானையை இறக்கி, பாதுகாத்து வருகின்றனர். குட்டி யானைக்குத் தேவையான பால் மற்றும் நீர் வழங்கப்பட்டு வருகிறது. தாய் யானைக்கு சிகிச்சை தொடர்ந்து வரும் நிலையில், அதனை விட்டு பிரிய முடியாமல், குட்டி யானையின் பாசப் போராட்டம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், வனப் பகுதியில் இருந்து இரண்டு யானைகள் திடீரென வெளியேறி, உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் பெண் யானை அருகே சத்தமிட்டவாறு சுற்றி வந்தது இருந்த போதிலும் தொடர்ந்து வனத்துறையினர் தாய் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் தாய் யானை உயிரிழந்தது.

இதனை அடுத்து வேறொரு யானை கூட்டத்துடன் குட்டி யானையை சேர்க்க முடிவெடுத்து இரவு 10 மணி அளவில் திம்பம் பண்ணாரி சாலையில் யானைக் கூட்டத்தில் குட்டி யானை சேர்த்தனர் தொடர்ந்து யானை கூட்டத்தை வனத்துறை கண்காணித்து வருகின்றனர்


நமது செய்தியாளர் முருகானந்தம்

Post a Comment

Previous Post Next Post