குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் வாகன ஓட்டிகளுக்கு எந்தவித தொந்தரவு கொடுக்காமல் சாலையோரம் நின்றபடி காட்டு யானை பலா பழம் பறித்ததை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்
நீலகிரி மாவட்டம் ,குன்னூர் அருகே பா்லியாறு, கே.என்.ஆர், புதுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியாா் தோட்டங்களில் தற்போது பலாப்பழம் அதிகம் விளைந்துள்ளது.
இதனால் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் இருந்து வந்த யானைகள் கூட்டம் பா்லியாறு, கே.என்.ஆா். பகுதியில் உள்ள பலாப்பழத் தோட்டங்களில் முகாமிட்டுள்ளன.
இந்நிலையில், குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் வடுகன் தோட்டம் பகுதிக்கு குட்டியுடன் வந்த யானை ஒன்று தனது கால்களை தரையில் ஊன்றியபடி சாலை ஓரத்தில் உள்ள ஒரு பலா மரத்தில் இருந்து பலா பழத்தை பறித்து தான் சாப்பிட்டதுடன், தனது குட்டிகளுக்கும் கொடுத்து கொண்டிருந்தது.
வாகன ஓட்டிகளுக்கு எந்தவித தொந்தரவு கொடுக்காமல் சாலையோரம் நின்றபடி காட்டு யானை பலா பழம் பறித்ததை அந்த வழியாக வாகனங்களில் வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கண்டு நெகிழ்ச்சி அடைந்தனா்.
குன்னூரின் முக்கிய சாலை என்பதால் இந்த சாலையில் வாகனங்கள் அதிகம் வந்து செல்லும். எனவே யானைகள் நடமாட்டம் உள்ள இந்த வழியில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிக கவனமுடன் வாகனங்களை இயக்க குன்னூர் வனத்துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்."
நமது செய்தியாளர் கரன்சி சிவக்குமார்