உதகை அருகே சிங்காரா நீர் மின்நிலைய குடியிருப்பு பகுதிக்குள் இன்று அதிகாலை காட்டு யானை ஒன்று படுத்து உறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரிய உருவம் கொண்ட காட்டு யானை மனிதர்களை போல கால்களை நீட்டி நீண்ட நேரம் படுத்து உறங்கியதை வியந்து பார்த்த நிலையில் மெதுவாக எழுந்து வன பகுதிக்குள் சென்றது யானை
நீலகிரி மாவட்டம் உதகை அருகே சிங்காரா நீர் மின் நிலையம் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் நிறுவப்பட்ட இந்த நீர் மின் நிலையம் இன்றளவும் செயல்பட்டு வரும் நிலையில் அதில் பணிபுரியும் ஊழியர்கள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் தங்கி உள்ளனர். இந்தக் குடியிருப்பு பகுதியை சுற்றி அடர்ந்த வன பகுதி உள்ள நிலையில் நேற்று இரவு காட்டு யானை ஒன்று நீர் மின் நிலைய குடியிருப்பு பகுதிக்குள் வந்துள்ளது. பின்னர் அந்த யானை வீட்டின் முன்பு இருந்த புல் மைதானத்தில் மனிதர்கள் உறங்குவது போல் படுத்து உறங்கியது.
நீண்ட நேரமாக அந்த யானை உறங்கிய நிலையில் இன்று அதிகாலை மின்வாரிய ஊழியர் ஒருவர் எழுந்து வந்து வீட்டின் கதவை திறந்துள்ளார். அப்போது வீட்டின் முன் யானை தூங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினரை அழைத்து உள்ளார். மனிதர்களின் சத்தம் கேட்ட அந்த யானை எழுந்து மெதுவாக நடந்து சென்றது. இதனால் சிங்காரா பகுதியில் அதிகாலையில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த காணொளி வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
நமது செய்தியாளர் :கரன்சி சிவக்குமார்