வால்பாறை அருகே குட்டிக்கு பலாப்பழம் கொடுத்து அன்பு வெளிப்படுத்திய தாய் யானை – இதமான தருணம் வைரல்!
வால்பாறை:
வால்பாறை அருகே உள்ள முடிஸ் பகுதியில், மனிதர்களைப் போல் பரிவு காட்டும் தாய் யானையின் பாசமான செயல் அனைவரது இதயத்தையும் தொட்டுக் கொண்டுள்ளது. தனது குட்டிக்கு பலாப்பழம் கொடுத்து அதற்கும் ருசிக்க வாய்ப்பு அளிக்கும் அந்த நெகிழ்ச்சி தரும் தருணம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒரு யானை தேயிலைத் தோட்ட பகுதியில் உள்ள பலாப்பழ மரத்தை தனது கால்களை வைத்து நன்கு ஊன்றிக் கொண்டு பலாப்பழங்களை பறிக்கிறது. பின், அதனை உடைத்து, தானாக சாப்பிடாமல், அருகில் நின்ற குட்டிக்கு கொடுத்து, அது சாப்பிடும் வரை பார்த்து காத்திருக்கும் இந்த அற்புதமான செயல், அப்பகுதியில் இருந்த ஒருவர் செல்போனில் படம் பிடித்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
யானைகளின் அன்பும், அமைதியும்: வனத்துறையினர் கண்காணிப்பு தீவிரம்:
வால்பாறை வனப்பகுதியில் அண்மைக்காலமாக யானைகள் கூட்டமாக சுற்றி திரியும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், மானாம்பள்ளி வனச்சரகர் கிரிதரன் உத்தரவின் பேரில், வனச்சரகர் முத்து மாணிக்கம் தலைமையில் மனித-விலங்கு மோதலைத் தடுக்க 24 மணி நேர கண்காணிப்பு பணிகள் ஈடுபட்டு வருகின்றன.
இயற்கையின் காதலும் உணர்வுகளும்:
இந்த வகை காட்சிகள், வனவிலங்குகளிலும் ஆழமான உணர்வுகள், தாய்மையினைப் போன்ற மனிதர்களுக்கு ஒப்பான நடத்தை இருப்பதை வெளிக்கொணர்கின்றன. இயற்கையில் எல்லா உயிர்களிலும் அன்பும் பரிவும் நிறைந்திருப்பதை இந்த வீடியோ மறுமுறையாக நினைவூட்டுகிறது.
நமது செய்தியாளர் :வடிவேல்
