உதகை அருகே தனியார் விடுதியில் நுழைந்த கரடி – ஃப்ரீசரில் இருந்த ஐஸ்கிரீமை சாப்பிட்ட வீடியோ வைரல்
நீலகிரி:
நீலகிரி மாவட்டத்தில், சமீபமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது
இந்த நிலையில், உதகையிலிருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் உள்ள பேரார் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் தங்கும் விடுதியில் நடந்து இருந்த அசாதாரண சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று இரவு, உணவுத் தேடலில் இருந்த ஒரு கரடி அந்த விடுதிக்குள் நுழைந்தது. பின்னர் அது நேராக உணவுக் கூடத்திற்கு சென்று உணவுகள் உள்ளதா என ஆராய்ந்தது. அங்கிருந்த சில உணவுகளை சாப்பிட்ட பிறகு, அந்த கரடி ஃப்ரீசரில் வைக்கப்பட்டிருந்த ஐஸ்கிரீம் பாக்கெட்களை கண்டது.
அது அந்த ஃப்ரீசர் பெட்டியை மெதுவாக அறையின் மையப் பகுதிக்குள் இழுத்துச் சென்றது. அதன் பிறகு அந்த பாக்கெட்களை ஒன்றொன்றாக எடுத்துப் பார்த்து சுவைக்கத் தொடங்கியது.
ஒரு கட்டத்தில், ஐஸ்கிரீம் மிக அதிக குளிர்ச்சியாக இருந்ததால் அதைத் தொடர்ந்தும் சாப்பிட முடியாமல் விட்டுவிட்டு, வெளியே சென்று விட்டது.
மறு நாள் காலை, விடுதிக்கு வந்த ஊழியர்கள், உணவுப்பொருட்கள் மற்றும் பொருட்களில் ஏற்பட்ட சேதங்களை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது, கரடியின் இந்த "ஐஸ்கிரீம் சாப்பிடும்" செயல் முழுவதும் பதிவாகியிருந்தது.
இந்நிகழ்வின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நமது செய்தியாளர் :கரன்சி சிவக்குமார்