அதிரப்பள்ளி – ஆற்றில் படுத்து தூங்கிய கொம்பன் யானை, மக்கள் பதட்டம் – பின்னர் நிம்மதி
அதிரப்பள்ளி:
யானைகளின் தூக்கம் என்பது அரிதாகவே காணக்கூடிய ஒரு நிகழ்வாகும். ஒரு நாளில் மூன்று முதல் நான்கு மணிநேரம் மட்டுமே யானைகள் தூங்குகின்றன. அதுவும், தங்களுக்கு பாதுகாப்பாக உணரப்படும் இடங்களில் மட்டுமே ஓய்வெடுப்பது வழக்கம்.
இன்று அதிரப்பள்ளி வெட்டிலப்பாறை பகுதியில், ஒரு கொம்பன் யானையின் தூக்கம் அங்கிருந்த மக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் சிறிது பதட்டத்தை ஏற்படுத்தியது.
அதிரப்பிள்ளி வெட்டிலப்பாறை மேல்நிலைப் பள்ளிக்கு எதிரே உள்ள தோட்டப்பகுதியில், ஒரு யானை ஆற்றுக்குள் சென்று அசைவின்றி படுத்திருந்தது. இதைக் கண்ட மக்கள் முதலில் அது மயக்க நிலையில் இருக்கலாம் என நினைத்தனர். சிலர் யானை உடல்நலக்குறைவால் அவசமான நிலையில் இருக்கலாம் என்றனர். மற்றொரு பக்கம், சிலர் “காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட சோர்வு காரணமாக ஆற்றில் படுத்து தூங்கியிருக்கலாம்” என்று கருதினர்.
சுமார் இரண்டு மணி நேரம் முழுவதும் மக்கள் அச்சத்துடன் யானையை கவனித்துக்கொண்டிருந்தனர். இடைக்கிடையே யானை தன் தும்பிக்கையை மட்டும் தூக்கியதை பார்த்ததும், அது இன்னும் உயிருடன் இருப்பதை உறுதி செய்தனர்.
இறுதியில், இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, யானை மெதுவாக எழுந்து மேலே வந்தது. இதைக் கண்ட மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனைவரும் பெரும் நிம்மதியடைந்து மகிழ்ச்சியுடன் அங்கிருந்து புறப்பட்டனர்.
யானைகளின் தூக்கம் அரிதாகவே கண்களுக்கு பட்டாலும், இயற்கையில் இத்தகைய தருணங்கள் மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்துகின்றன.
நமது செய்தியாளர் :வடிவேல்