Followers

பொள்ளாச்சி – வால்பாறை சாலையில் குட்டிகளுடன் உலா வந்த காட்டு யானை கூட்டம் – சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை

 பொள்ளாச்சி – வால்பாறை சாலையில் குட்டிகளுடன் உலா வந்த காட்டு யானை கூட்டம் – சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை



பொள்ளாச்சி:

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம், தமிழகத்தின் முக்கியமான வனவிலங்கு சரணாலயங்களில் ஒன்றாகும். இங்கு ஆறு வனச்சரகங்கள் இயங்கி வருகின்றன. இந்த வனப்பகுதியில் யானைகள், சிறுத்தைகள், புலிகள், காட்டு மாடுகள், கரடிகள் உள்ளிட்ட பல்வேறு காட்டு விலங்குகள் மட்டுமின்றி அரிய வகை பறவைகளும் வாழ்ந்து வருகின்றன.


பொதுவாக, வறட்சி நிலை அதிகரிக்கும் கோடைகாலங்களில் மற்றும் மழை குறைவாக இருக்கும் நாட்களில், வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவைத் தேடி சாலைகளின் அருகே உலா வருவது இயல்பான ஒன்று. குறிப்பாக, யானைகள் தங்கள் கூட்டத்துடன் சாலை ஓரங்களில் நடமாடுவதும், நீர்நிலைகளுக்குச் செல்வதும் அடிக்கடி காணப்படுகிறது.



அவ்வாறு, நேற்று இரவு 7 மணி அளவில்  ஆழியார் கவி அருவி அருகே உள்ள வால்பாறை சாலையில்,  காட்டு யானை கூட்டம் குட்டிகளுடன் வனப்பகுதியிலிருந்து வெளிவந்து சாலையை கடந்து சென்றது. அந்த தருணத்தை பார்த்த வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சமும் ஆச்சரியமும் அடைந்தனர்.


வனத்துறையினர், “யானைகள் பெரும்பாலும் காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டமாகச் சாலைகளில் தோன்றுகின்றன. எனவே, இந்தப் பகுதிகளில் பயணம் செய்யும் போது சுற்றுலா பயணிகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். யானைகள் வனப்பகுதியை விட்டு சாலைகளுக்கு வரும் போது, வாகனங்களை நிறுத்தி கூட்டமாகக் காண முயல்வது மிகவும் ஆபத்தானது. 


மேலும், வால்பாறை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் ஆழியார் வன சோதனை சாவடியில் வனத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வனப்பகுதிக்குள் செல்லும் வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்தக் கூடாது என்றும், வனவிலங்குகளை அச்சுறுத்தி புகைப்படம் எடுப்பது அல்லது வீடியோ பதிவு செய்வது தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


 சுற்றுலா பயணிகளிடம், வனவிலங்குகளின் இயல்பான நடமாட்டத்தை மதித்து, இயற்கையைப் பாதுகாக்கும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற  அறிவுறுத்தலையும் விடுத்துள்ளனர்.

நமது செய்தியாளர்: வடிவேல்

Post a Comment

Previous Post Next Post