தாயை பிரிந்த குட்டி யானைக்கு டாப்ஸ்லிப்பில் தனி கூண்டு – பாகன்களின் அன்பில் பழகும் “சிறுமுகை குட்டி”யானை
கோவை மாவட்டம் சிறுமுகையில் தாயை பிரிந்த நிலையில் மீட்கப்பட்ட ஆண் குட்டி யானை, தற்போது டாப்ஸ்லிப் கோழிக்கமுத்தி யானைகள் முகாமில் சிறப்பு பராமரிப்பில் உள்ளது.
வனத்துறையினர் யானைக் கூட்டத்துடன் இணைக்க முயன்றபோதும், குட்டி தனியாகவே இருந்தது. இதனால் அதன் பாதுகாப்பு கருதி, இரண்டு மாதங்களுக்கு முன்பு கோழிக்கமுத்தி முகாமிற்கு கொண்டு வரப்பட்டது.
தற்போது முருகன் மற்றும் கண்ணன் எனும் இரண்டு பாகன்கள் மூலம் 24 மணி நேர கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. பால் குடித்துக் கொண்டிருந்த குட்டி தற்போது புல் மேயும் அளவுக்கு வளர்ந்து, பாகன்களின் சொல் கேட்டு நடக்கும் அளவுக்கு பழகியுள்ளது.
வாரம் ஒருமுறை வன கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகிறார்கள். தற்போது 5 மாத வயதான குட்டி ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாக ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவேந்திர குமார் மீனா தெரிவித்துள்ளார்.
சுற்றுலா பயணிகள் குட்டி யானையை பார்க்க அதிக ஆர்வம் காட்டினாலும், அதன் நலனை கருத்தில் கொண்டு அனுமதி தற்காலிகமாக மறுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
நமது செய்தியாளர் :பொள்ளாச்சி சக்திவேல்



