பலா பழ சீசன் தொடங்கியதால் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. வாகனங்களை கவனமுடன் இயக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளுக்கு குன்னூர் வனத்துறையினர் அறிவுரை வழங்கி உள்ளார்கள்.
காட்டு யானைகளுக்கு விருப்பமான உணவுகளில் ஒன்றாக பலாப்பழம் முக்கிய இடம் பிடிக்கிறது. பலா பழத்தின் வாசனையை நுகர்ந்து யானைகள் பலா பழம் உள்ள இடங்களை தேடி வருகின்றன. குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பர்லியார், கே.என்.ஆர்.நகர், மரப்பாலம் போன்ற பகுதிகளில் உள்ள தேயிலை மற்றும் காபி தோட்டங்களில் பலா மரங்கள் ஊடுபயிராக பயிரிடப்பட்டுள்ளன ஆண்டு தோறும் பலாபழ சீசன் ஜூன் மாதத்தில் தொடங்கும். அப்போது சமவெளி வனப் பகுதியிலிருந்து வெளியேறும் காட்டு யானைகள் குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் முகாமிட்டு வருகின்றன. தற்போது பலா பழ சீசன் தொடங்கி உள்ளதால்
பலா பழத்தை ருசிக்க குட்டியுடன் காட்டு யானைகள் மேட்டுப்பாளையம் வனப் பகுதியிலிருந்து குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள வடுகன் தோட்டம் பகுதியில் முகாமிட்டுள்ளன. பர்லியார் முதல் காட்டேரி வரையிலான சாலையோர வனப்பகுதிகளில் இருபுறமும் பலா பழங்கள் அதிகளவில் காய்த்து குலுங்குவதால் தற்போது காட்டு யானைகள் குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைபாதையில் அடிக்கடி நடமாடி வருகின்றன.
காட்டுயானைகள் அவ்வப்போது சாலையை கடப்பதால் வாகனங்களை கவனமுடன் இயக்க வனத்துறை அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் சாலையை கடக்கும் யானைகளை புகைப்படம் எடுப்பதோ அல்லது செல்பி எடுத்து இடையூறு ஏற்படுத்த கூடாது என்றும் வனத்துறையினர் எச்சரித்து வருகின்றனர்
நமது செய்தியாளர் கரன்சி சிவக்குமார்